தமிழரசின் சுயநலத்துக்காகவே சசிகலா பயன்படுத்தப்படுகிறார்! ஆதங்கப்படுகின்றார் அனந்மி

தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு தன்னைப் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் மாற்றுத் தலைமையான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கூறுகையில், “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியாக தேர்தலில் களமிறங்கியுள்ளது. இம்முறை எமக்கு மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும்.

பல  கோரிக்கைகளை முன்வைத்து கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து, அவர்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று எதனைச் சாதித்தார்கள் என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

எங்களுடைய இன விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளை அல்லது முன்னாள் போராளிகளை நான் அரசியலுக்குக் கொண்டுவர விரும்பினேன்.

இவ்வாறிருக்க, சுமந்திரன் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வந்ததாகக் கூறி, இன்றும் தமிழ் அரசியல் கைதிகளாக புனர்வாழ்வு பெற்று அரசியல் கைதிகளாக இருந்த முன்னாள் போராளிகள் இன்றைக்கும் தடுப்பில் இருக்கின்றார்கள்.

ஆனால், தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப் புலிகளுடைய அனுதாப வாக்குகளைப் பெறுவதற்கு மாறுபட்ட கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்த சுமந்திரன் திடீர் அக்கறை கொண்டுள்ளார்.

விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய அதே சுமந்திரன் தேர்தலுக்காக அரசியல் நாடகம் ஆடிவருகின்றார்.

இந்நிலையில் தற்போதைய தேர்தலில், சரிந்துள்ள வாக்கு வங்கியை ஓரளவு சரி செய்ய தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவியை களமிறக்கியுள்ளனர்.

இந்தச் செயற்பாட்டினைப் பார்க்கும்போது, நான் அரசியலுக்கு வந்ததும் தமிழரசுக் கட்சி என்னை எவ்வாறு கறிவேப்பிலையாகப் பாவித்தது போலவே, சசிகலா ரவிராஜிற்கும் நடைபேறலாம். எனவே அவர் அவதானமாக இருக்க வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் நான் இதனைக் கூறுகின்றேன்” என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.