சி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் புதிய இயக்குநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அவர் கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “எனது தந்தை லசந்த விக்ரமதுங்க 2009 ஜனவரி மாதம் அத்திடியவில் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை குறித்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

2010 இல் பயங்கரவாத விசாரணை பிரிவின்( ரி.ஐ.டியின்) பொறுப்பதிகாரியாக காணப்பட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஆர்.பிரசன்ன ஜே.அல்விஸ் எனது தந்தையை கொலை செய்தவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக ஆதாரங்களை மறைத்தார். சந்தேகநபர்களை காப்பாற்றினார் என 2019 ஒக்டோபரில் சி.ஐ.டி.யினர் கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான குற்றங்களிற்கு ஏழு வருட சிறைத்தண்டனையை வழங்கலாம். இதனைத் தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபர் அல்விஸை கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பதில் பொலிஸ் மா அதிபர் திடீரென தனது மனதை மாற்றிக்கொண்டார்.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்விஸ் அதன் பின்னர் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுமில்லை.

மாறாக மே 21ஆம் திகதி சி.ஐ.டி.யின் புதிய இயக்குநராக அல்விஸை நியமிப்பதை அங்கீகரிக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டது.

கொலை சந்தேகநபர் என்ற அடிப்படையில் அல்விஸை கைது செய்யுமாறு உத்தரவிட்டு பல மாதங்களின் பின்னர் சி.ஐ.டி.யின் இயக்குநராக அவரை நியமிப்பதற்கு ஆணைக்குழுவை இயங்க செய்தார்.

பதில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மார்ச் மாதம் 20ஆம் திகதி ஓய்வுபெற்ற பின்னர் விக்ரமரட்ண பதில் பொலிஸ் மா அதிபர் என்ற பதவியில் சட்டவிரோதமாக நீடிக்கின்றார் என்பது ஆணைக்குழுவிற்கு தெரியாமலிருக்கலாம்.

அரசமைப்பின்படி அரசமைப்பு பேரவையின் அனுமதியின்றி 14 நாட்களிற்கு மேல் எவரும் பதில் பொலிஸ் மா அதிபராக நீடிக்க முடியாது.

சி.ஐ.டி.யின் இயக்குநரின் பதவியிலிருந்து அல்விஸை நீக்கி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு நான் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை கேட்டுக்கொள்கின்றேன்.

அல்விஸ் கைதிலிருந்து தப்புவதற்கும் சி.ஐ.டி.யின் தலைவராக நியமிக்கப்படுவதற்கும் பதில் பொலிஸ்மா அதிபர் எந்த வகையில் உதவினார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.