சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி உறுதி

சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி தேர்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் நேற்று (புதன்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே ஜனாதிபதி கோட்டா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “கொரோனா நோய்த் தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் சில மாதங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. அது தேர்தலை எதிர்பார்த்தன்றி மக்களையும் நாட்டையும் இந்த ஆட்கொல்லி நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகும்.

சில மாதங்களாக பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முடியும். இந்த நிலைமை குறித்து மக்கள் தெளிவுடன் இருப்பதன் மூலம் எவ்வித சுகாதார பிரச்சினையுமின்றி தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தலுக்கான அடிப்படை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட ஏனைய அனைத்து தரப்பினரதும் பங்களிப்பை பெற்றுக்கொள்வதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் கடமைகளுக்காக அதிகாரிகளின் கட்டாயமான பங்கேற்பை உறுதிசெய்வதற்கு சட்ட ரீதியான அடிப்படையொன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதன் பணிப்புரைகளை தாபனக் கோவையில் உள்ளடக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மக்கள் கூட்டங்களில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கை மற்றும் வீடுகளுக்கு சென்று செய்யப்படும் பிரசாரத்தின் போதான சுகாதாரப் பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பும் பொறுப்புடன் செயற்படுவது தேர்தலை வெற்றிகரமாக செய்வதற்கு உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் கொவிட் 19 ஒழிப்பு பரிந்துரைகளை வர்த்தமாணி மூலம் அறிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார சட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாக்களிப்பு நிலையங்களில் இடவசதி பிரச்சினை ஏற்பட்டால் தேவையான உதவியை வழங்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

ஜுலை மாதம் 31ஆம் திகதி முதல் ஊர்களுக்கு செல்லும் மற்றும் தேர்தலின் பின்னர் மீண்டும் வருகை தரும் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை திட்டமிடுவது குறித்தும் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் மற்றும் என்.ஜே.அபேசேக்கர, தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.டி.டீ. ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீஜயசுந்தர, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ரத்னசிறி, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்சீவ முணசிங்க ஆகியோரும் பங்குபற்றினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.