இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 3 கட்டங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகள்

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், 03 கட்டங்களில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு,  சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. .

அதற்கமைய, சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும்போது தங்களது நாடுகளில் பெற்றுக்கொண்ட பி.சி.ஆர்.  பரிசோதனையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கையை வந்தடைந்தவுடன், விமான நிலையத்தில் இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும்.

சுற்றுலாப் பயணிகளின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள், விமான நிலையங்களுக்கு அருகில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும்போது மூன்றாவது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பெரும்பாலான நாடுகள் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி முதல், விமான நிலையங்களை மீளத் திறக்கத் தீர்மானித்துள்ளன.

ஆனால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கையால் தாமதம் ஏற்பட்டுள்ளமையால் ஓகஸ்ட் முதலாம் திகதியே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீளத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.