தங்கள் இயலாமையை மறைக்க சங்கா, மஹேல மீது குற்றச்சாட்டு  மஹிந்தானந்த மீது சீறிப் பாய்கின்றார் சஜித்

“தமது அரசின் இயலாமையை மறைப்பதற்காக நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது சில செயற்திறனற்ற அரசியல்வாதிகளால் ஒரு நுட்பமாகப் பயன்படுத்தப்படுகின்றது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

2011 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டது என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வெளியிட்ட கருத்தையடுத்து பெரும் சர்ச்சையொன்று கிளம்பியிருக்கும் நிலையில், எவ்வித ஆதாரங்களுமின்றி அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்குக் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

இந்தநிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்குக் கண்டனம் வெளியிட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது ருவிட்டர் பக்கத்தில் இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:-

“தமது அரசின் இயலாமையை மறைப்பதற்காக நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது சில செயற்தினற்ற அரசியல்வாதிகளால் ஒரு நுட்பமாகப் பயன்படுத்தப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் தமது திறமையை நிரூபித்த சிறந்த கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் மீது இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படக்கூடாது.

அவர்களுடைய அர்ப்பணிப்பான சேவைக்கும், அவர்கள் நாட்டுக்குப் பெற்றுத் தந்தவற்றுக்கும் உயர்வாக நடத்தப்படும் தகுதியை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.