வடக்கு கிழக்கில் இராணுவமயம் – ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை

போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டு கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன என ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமையை நேரில் ஆராய்ந்ததன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ள வருடாந்த அறிக்கையில் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் இதனை தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்புகளைக் கண்காணித்தல், வீடு அல்லது அலுவலகத்துக்குப் பின்தொடர்தல், உளவுத்துறைகள் ஊடாக ஒளிப்பதிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற வகையிலும் கண்காணிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.

போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் படைத் தரப்பினர் மற்றும் உளவுத் துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் இவ்வாறான போராட்டங்களில் பங்கேற்போர் போராட்டங்களுக்கு முன்பும் பின்பும் அது குறித்து விசாரிக்கப்படுவதுடன், அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர் என்றும் ஐ.நா. விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட உளவுத்துறை அதிகாரிகள் அடிக்கடி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குள் நுழைவது, கேள்விகளை எழுப்பி அவற்றின் உறுப்பினர்களைச் அச்சுறுத்தும் போக்கில் நடந்துகொள்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நான் மேற்கொண்ட ஒரு சந்திப்பில்கூட சந்திப்பு நடைபெற்ற இடத்துக்கு வெளியே அந்தச் சந்திப்பில் பங்கேற்றவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர் என்றும் மற்றொரு இடத்தில் நான் பயணம் செய்த வாகனத்தின் இலக்கத்தை இராணுவத்தினர் அவதானித்துப் பதிவு செய்ததை அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தலான ஒரு சூழலை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான கண்காணிப்புக்கள் இடம்பெறுகின்றன என தெரிவித்த ஐ.நா. விசேட அறிக்கையாளர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்புக்களுடனான தொடர்புகளைப் பேணும் சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களைப் பழிவாங்கும் செயற்பாடாகவும் இந்தக் கண்காணிப்புக்கள் கருதப்படலாம் என தெரிவித்துள்ளார்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள், அமைதியான போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது தொடர்பாக கிடைத்த அறிக்கைகள் கவலை அளிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூழலை உருவாக்குகின்றது என்றும் இது சுய தணிக்கைக்கும் வழிவகுக்கின்றது என்றும் ஐ.நா. விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.