ஆட்டநிர்ணயத்தை மறைப்பது ஒரு குற்றம் – லக்ஷமன் கிரியெல்ல

ஆட்ட நிர்ணயம் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்பு முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதுபோன்ற தகவல்களை வெளியிடத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரிடம் இது குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், அதை சர்வதேச கிரிக்கெட் சபையிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண இறுதிப் போட்டி நடைபெற்று 9 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டினை முன்வைப்பது நியாயமற்றது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது இதுபோன்ற முக்கியமான தகவல்களை வெளியிடத் மஹிந்தானந்த அளுத்கமகே தவறிவிட்டார் என்றும், ஐ.சி.சி சட்டங்களின்படி, அத்தகைய தகவல்களை மறைப்பதும் ஒரு குற்றமாகவே கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு அரசியல்வாதிகளும் நாட்டுக்கு பெற்றுக்கொடுக்காத மரியாதையையும் பெருமையையும் கிரிக்கெட் வீரர்களே இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்தார்கள் என சுட்டிக்காட்டிய லக்ஷ்மன் கிரியெல்ல, இவ்வாறான மோசமான குற்றச்சாட்டுகள் மூலம் அவர்களை களங்கப்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.