கருணாவின் உரைக்கு எதிராக ஐ.தே.கவினரும் போர்க்கொடி!
– இவ்வாறு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளருமான ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு ஆதரவளிக்கும் வகையில் களமிறங்கியுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில், ‘பிரதமர் என்னிடம் பேசினார். இம்முறை தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்துக்குப் பிரவேசியுங்கள். ஏன் சிரமப்படுகின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு நான், இம்முறை போட்டியிட்டுகின்றேன். கட்டாயம் வெற்றி பெறுவேன் என்று கூறினேன். நான் கொரோனாவை விடவும் ஆபத்தானவன் என்று காரைத்தீவு தவிசாளர் கூறியிருந்தார். ஆம் நான் அவ்வாறானவன்தான். கொரோனாவால் 9 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். ஆனால் நாம் ஒரே இரவில் 2000 – 3 ஆயிரம் இராணுவத்தினரைக் கொன்றுள்ளோம். அனைவரும் அறிவீர்கள்தானே? கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றோம்’ என்று கருணா அம்மான் கூறியுள்ளார்.
இவரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த கருத்துக்கள் நாட்டின் சட்டக் கட்டமைப்புக்குப் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசப்பற்று பற்றி தெற்கில் பேசுபவர், வடக்கு – கிழக்கில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களைக் கொன்றதாகக் கூறி தமிழ்பேசும் மக்களிடம் வாக்குகளைக் பெற முயற்சிப்பது கவலைக்குரியதாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருணா அம்மான் போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு அவரது கட்சியில் பதவிகளை வழங்கியிருப்பதன் அரசியல் நோக்கம் என்ன ? மேலும் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு அறிவுள்ள மக்கள் சமூகம் இடமளிக்கப் போவதில்லை” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை