நாட்டில் தீர்மானம் மேற்கொள்ளும் சக்தியாக தமிழர்கள் மாற வேண்டும்- சாணக்கியன்

நாட்டில் ஒரு தீர்மானம் மேற்கொள்ளும் சக்தியாக  தமிழர்கள் மாறும்போதே தமக்கான அபிவிருத்தியை நோக்கி செல்லமுடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமையினை நிலைநாட்டும் ஒரேயொரு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடிப்படையிலேயே அதன் ஊடாக தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

வட.கிழக்கில் நாங்கள் தமிழர்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்கவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர்த்து களமிறங்கியுள்ள ஏனைய தமிழ் கட்சிகள், தமிழர்களுக்கு கிடைக்கவிருக்கும் நான்காவது ஆசனத்தினை மழுங்கடிப்பதற்கே களமிறங்கியுள்ளனர்.

எனது கடந்தகால அரசியல் செயற்பாட்டில் நான் அறிந்த உண்மையென்னவென்றால், இந்த நாடு தமிழர்களுக்கும் சொந்தமான நாடு என்று இலங்கையில் கூறும் ஒரெயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புதான்.

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு இணையாக தமிழ் மக்களுக்கும் உரிமையிருக்கின்றது என்று வாதாடும் ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும்தான்.

இந்த நாடு தமிழ் மக்களுக்கும் சொந்தமான நாடு என்பதிலிருந்து விலகி இது பௌத்த நாடு என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதையே இன்று பேரினவாத அரசாங்கம் விரும்புகின்றது.

அதற்குரிய சந்தர்ப்பத்தினை நாங்கள் வழங்கமுடியாது. அதற்கான நடவடிக்கையினை நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக மட்டுமே முன்னெடுக்க முடியும்.

அபிவிருத்தி என்பது பாலங்கள், கட்டடங்களும் பொதுக்கட்டடங்களுமில்லை. நாங்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்போதே முழுமையான அபிவிருத்தியை அடையமுடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.