நாட்டை கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதை தடுக்க கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் – கருணாகரம்

அரசாங்கம், நாட்டை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்லும் நிலைமையை நாங்கள் தடுக்க வேண்டுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்த வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  கருணாகரம் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை, தமிழ் மக்களுக்கு குறிப்பாக வட.கிழக்கு மக்களுக்கு மிகச் சவாலான தேர்தலாகப் பார்க்கின்றோம்.

அதாவது, கடந்த காலங்களில் நமது இனம்பட்ட துன்பங்களை நான் விலாவாரியாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் அந்த அனர்த்தங்கள், துன்பியல் சம்பவங்கள் அனைத்தையும் நாங்கள் கண்கூடாகக் கண்டவர்கள். அவைகளுக்கு தீர்வு வேண்டும்.

எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு தீர்வு வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக சுயாட்சி உரிமையுடன் வாழ வேண்டுமாக இருந்தால், நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பேரம் பேசும் சக்தியாக இந்த நாட்டில் மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.

குறிப்பாக தற்போதைய நாட்டின் ஜனாதிபதியின் கட்சி, 3/2 பெரும்பான்மையைப் பெறுவதற்கு மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த பெரும்பான்மையைப் பெற்று இந்த நாட்டை ஒரு வித்தியாசமான கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும்.

இத்தகைய செயற்பாட்டினை  நாங்கள் தடுக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலம் பெறச் செய்யவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.