கருணாவை கைதுசெய்து துணிச்சலைக் காட்டுங்கள்- ஐக்கிய பிக்குகள் முன்னணி சவால்!

இராணுவத்தினரை கொலைச் செய்ததாகக் கூறியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரனின் (கருணா) கருத்துத் தொடர்பாக அவதானம் செலுத்தி அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறறு ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்களாயின் அவர்களே நாட்டின் துணிவுள்ள தலைவர்கள் என்பதை ஏற்றுகொள்வோம் எனவும் பிக்குகள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐக்கிய பிக்குகள் முன்னணியினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், “கருணா அம்மான் கிழக்கில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பேசும்போது , தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தராக செயற்பட்ட காலத்தில் ஒரே இரவில் 2000 தொடக்கம் 3000 வரையான இராணுவத்தினரைக் கொலைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுபெரும் சமூக குற்றச் செயலாகும். இந்தக் கருத்தானது தேசப்பற்றுள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யுத்தகாலத்திலே உயிரிழந்த இராணுவத்தினரில் எமது இரத்த உறவுகளும் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு சமூக குற்றங்களைச் செய்துள்ள பயங்கரவாத குழுவின் முக்கியஸ்தர் ஒருவருக்கு சிங்கள பௌத்த மக்களினதும், இராணுவத்தினரதும் அபிமானத்தை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு மக்களின் நம்பிக்கையை வென்று இன்று ஆட்சியமைத்துள்ள கோட்டாபய – மஹிந்தவின் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?

இராணுவத்தினரின் உயிரிழப்புக்குக் காரணமான கருணாவுக்கு மக்களிடம் அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து வாழ்க்கை நடத்துவதற்கான சந்தர்ப்பதத்தையும் அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறும் அனைத்து வரப்பிரசாதங்களையும் ராஜபக்ஷாக்கள் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்திலே சிங்கள பௌத்த மக்களுக்காகவும் இராணுவத்தினருக்காகவும் குரல் எழுப்பிய பிக்குகள் தற்போது எங்குள்ளார்கள்?

ஜனாதிபதி தேர்தல் காலத்திலே சிங்கள பௌத்த மக்களையும் இராணுவத்தினரையும் ஏமாற்றி அவர்களைக் காட்டிக்கொடுத்து சில தேரர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டதை அவதானித்திருந்தோம். இந்நிலையில் கருணாவின் கருத்து தொடர்பாக மக்கள் மத்தியில் வந்து மதபோதனைகளை வழங்கும் தேரர்கள் அவர்களின் கருத்தை நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பொதுஜன பெரமுனவினர் எப்போதும் நாட்டுக்கு வைரஸ்களையே விதைத்துள்ளனர். கருணாவின் கருத்தின் மூலம் அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே இவர்கள் எண்ணியிருக்கின்றனர். கிழக்கில் இராணுவத்தினரை கொலை செய்ததாகக் குறிப்பிட்டு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதுடன் தெற்கில் இராணுவத்தினர் கொலை தொடர்பாக அச்சுறுத்தல் விடுத்து இனியொரு காலமும் இவ்வாறான நிலைமை ஏற்படக்கூடாது என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வாக்குகளைக் கைப்பற்ற எண்ணியுள்ளனர்.

சிறு குற்றச் செயல்கள் தொடர்பாக பலர் சிறைவைக்கப்பட்டுள்ள வரலாறை எம் நாடு கொண்டுள்ளது. இந்நிலையில், கருணா அம்மானின் கருத்திலிருந்து அவர் மாபெரும் குற்றச் செயலை செய்துள்ளமை புலப்படுகின்றது. இதனால் கருணாவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.