இலங்கையில் கடந்த இரு நாட்களாக எவருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை

இலங்கையில் கடந்த இரு நாட்களாக எவருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் இதுவரை ஆயிரத்து 498 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று மட்டும் இந்த தொற்றிலிருந்து 26 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர்.

தேசிய தொற்று நோயியல் நிறுவகம், வெளிக்கந்தை, காத்தான்குடி, தெல்தெனிய ஆகிய ஆதார மருத்துவமனைகளில் இருந்தும் ஹம்பாந்தோட்டை மற்றும் ஹோமாகமை ஆகிய மருத்துவமனைகளில் இருந்து இவ்வாறு பூரண குணமடைந்த நிலையில் அவர்கள் வெளியேறியுள்ளனர்.

அதேநேரம், கொரோனா தொற்றுறுதியான 441 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.