தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களின் வாக்குரிமையை பாதுகாக்கவும்- மனித உரிமைகள் மையம்

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கின்ற வாக்காளர்களினதும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  கைதிகளுகளினதும் வாக்குகளை பாதுகாக்குமாறு  அரசாங்கத்திடம் இலங்கையின் மனித உரிமைகள் மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் சுரங்கி ஆரியவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “சிறைக்கைதிகளின் வாக்குரிமை தொடர்பாக இதற்கு முன்னர் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனாலும் எந்ததொரு தரப்பினராலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமை கவலையளிக்கிறது.

இம்முறை கொரோனா அச்சத்தின் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்ககூடிய அவர்கள் தொடர்ந்தும் தேர்தல் நடக்கும் தினத்தன்றும் அவ்வாறு இருப்பார்களாயின், அவர்களுடைய வாக்குரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வாக்களிக்கின்ற உரிமை இந்த நாட்டில் இருக்ககூடிய அனைத்து பிரஜைகளுக்கும் இருப்பதனால், வேறு காரணங்களுக்காக அவர்கள், வாக்குரிமை அளிப்பதற்கு தடையாக இருப்பதை எந்தக்காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் இதுவரை இருந்த எந்ததொரு அரசாங்கமும் தடுப்பு காவலில் இருக்கின்ற கைதிகளுக்கு  வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக  குரல் கொடுத்திருந்தனர். ஆனாலும், எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சிறைக்கைதிகள் குறைவாக இருப்பதனால் அவர்களது வாக்குகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட காரணத்தினால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.