யுத்தத்தால் நலிவடைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு தயார் – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்

இலங்கையில் யுத்தத்தால் நலிவடைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், மக்களின் நல்லிணக்கம் சார்ந்த இணக்கப்பாட்டு வேலைத் திட்டங்களையும்  மேற்கொள்ள தாம் எப்போதும் தயாராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டெனிஸ் சைபி  தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை கிராமத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வீ எபக்ட் நிறுவனம் ஊடாக  மேற்கொள்ளப்பட்ட வாழ்வாதார மேம்பாட்டு வேலைத் திட்டங்களை  ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டெனிஸ் சைபி  இன்று (திங்கட்கிழமை)  சென்று பார்வையிட்டதுடன் அக் கிராம மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டார்.

இதில், வீ எபக்ட் (We Effect) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் வதிவிடப் பிரதிநிதியுமான ரீ. மயூரன், காவியா  பெண்கள் அமைப்பின் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார், வீ எபக்ட் (We Effect) நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் பிரியந்த ஜெயக்கொடி மற்றும் காவியா அமைப்பின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 2018ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வீ எபக்ட் நிறுவனம் ஊடாக காவியா பெண்கள் அமைப்பினால் மேற்படி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

”இங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வீ எபக்ட் நிறுவனம் ஊடாக   மேற்கொள்ளப்பட்ட இந்த வேலைத் திட்டங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை வலுப்புத்தும் திட்டங்கள் சிறந்த முறையில் உள்ளது இதனை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கின்றது.

இலங்கையில் யுத்தத்தால் நலிவடைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், மக்களின் நல்லிணக்கம் சார்ந்த இணக்கப்பாட்டு வேலைத் திட்டங்களையும்  மேற்கொள்ள தாம் எப்போதும் தயாராக உள்ளோம்.” என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.