ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடத்த அவதானம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூழ்நிலையில் சமூக இடைவெளி பற்றிய வழிகாட்டல்கள் தொடர்ந்தால் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைக் கண்டறிந்து கொள்வதற்கான ஒத்திகை அமர்வொன்று நாடாளுமன்றகுழு அறையில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதி செயலாளர் நாயகமும், பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவெல மற்றும் நாடாளுமன்ற சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்மூலம் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் நாடாளுமன்றத்துக்கு வருகைதராமல் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக ஒன்லைன் மூலம் குழு அமர்வுகளில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் ஏற்படும்.

நாடாளுமன்ற அமர்வுகள் அற்ற தினத்தில் இடம்பெறும் குழு அமர்வுகளில் கூட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு நேரடியாக சமுகமளிக்காது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக குழு அமர்வுகளில் பங்கேற்கும் வகையில் இதனைப் பயன்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

குழு அறைகள் சிலவற்றில் இடம்பெறும் அமர்வுகளை ஒளிப்பதிவு செய்வதற்கான கமரா கட்டமைப்புக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டிருப்பதால், ஒன்லைன் முறைமையில் குழு அமர்வுகளை நடத்துவது வெற்றிகரமாகப் பரிசீலித்துப் பார்க்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். காணப்படும் சிறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் தற்பொழுது 8 குழு அறைகள் மாத்திரமே காணப்படுவதால் நாடாளுமன்ற அமர்வு தினத்தில் ஏற்படும் நெரிசல்களைக் குறைப்பதற்கும், செலவிடும் காலம் மற்றும் ஏற்படும் செலவீனங்களைக் குறைப்பதைக் கவனத்தில் கொண்டும் கொவிட் தொற்றுநோய் சூழல் முடிவடைந்த பின்னரும் இந்த முறையினை நடைமுறைப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்றும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய ஒன்பதாவது நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பான யோசனையொன்றை முன்மொழியவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்