உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள்: எனது மகள் துரோகமிழைத்துவிட்டார்- பெண் தற்கொலைதாரியின் தாய்

நாட்டிற்கு பாரிய துரோகத்தை எனது மகள் இழைத்து விட்டாரென தெமட்டகொட மகாவில கார்டனில் தன்னை வெடிக்கவைத்து உயிரிழந்த பெண் தற்கொலைதாரியான பாத்திமா ஜிவ்ரியின் தாயார் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகி சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறித்த தாய் மேலும் கூறியுள்ளதாவது, “எனது மகளிற்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அத்துடன் உயிரிழந்தவேளை, அவர் கர்ப்பிணி ஆவார்.

மேலும் சங்கிரிலா- ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி இல்ஹாம் அகமட்டினை எனது மகள் எப்போது மணமுடித்தார் என்பது எனக்கு  ஞாபகமில்லை. ஆனால், அவர் 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்திருக்கலாம் என  நினைக்கின்றேன்.

வெடிப்புச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் எனது மகள், தொலைபேசியில் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி, உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நான் எனது மகளை பார்ப்பதற்காக அங்கு சென்றேன். பின்னர் என்ன நடந்தது என கேட்டேன்.  அதற்கு எனது மகள்,  தனது கணவர் வீட்டிற்கு வந்து பிள்ளைகளை கட்டியணைத்து அழுதார் என தெரிவித்தார்” என அவர் ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.