கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் – சார்ள்ஸ்

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது மூன்று கட்சிகள் இருக்கின்றன. அக்கட்சியில் இருக்கின்ற ஒரு சில நபர்களுடைய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களாக இருந்தாலும் எக்காலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய முடிவுகள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமைந்தது இல்லை.

அந்த காலத்தில் இருந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்த வளங்களைப் பயன்படுத்தி மக்கள் நலன் சார்ந்த முடிவுகளையே எடுத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள், தேர்தல் அரசியல் நோக்கம் கொண்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அரசியல் செய்ய முடியாதவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் மக்களையும் பிரிக்க நினைக்கின்றவர்களே இவ்வாறு குற்றம் சுமத்துகின்றனர்.

தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களத்தினால் எங்களுடைய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான அணியாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றபோது இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பலமான அணியாக எதிர்காலத்தில் இல்லாதுவிட்டால், அது தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே, மேற்கொள்ளப்படும” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.