கொரோனா தொற்று ஏற்படாத மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதி அளிக்கவேண்டும்!..

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு சுகாதார நடைமுறையில் தளர்வு நிலை வேண்டும்,சுதந்திரமாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள அனுமதி வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் எட்டு வேட்பாளர்களுக்குமான அறிமுக கருத்தரங்கு மண்முனை தென்மேற்கு இலங்கை தமிழரசு கட்சி கிளையின் ஏற்பாட்டில் நேற்று 22/06/2020 மாலை முதலைக்குடாவில் இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடலில் தலைமை உரையாற்றுகையில் தற்போது தேர்தல் பிரசாரங்களை சுதந்திரமாக செய்யமுடியாத நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலதரப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பிரசாரங்களை முன் எடுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையகத்தினால் சுகாதார வளிகாட்டலுக்கு அமைவாக விதிமுறைகள் அடங்கிய விபரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விதிமுறைகள் இலங்கையில் உள்ள 22,மாவட்டங்களுக்கும் தேர்தல் பிரசாரங்கள், வாக்களிப்பு நிலையங்களில் சென்று வாக்களிப்பது தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுக்கள் ஏற்படவில்லை இலங்கையில் உள்ள 22 மாவட்டங்களிலும் ஏற்படவில்லை சில மாவட்டங்களிலேயே குறிப்பாக கொழும்பு கம்பகா உட்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே கூடுதலான நோயாளர்கள் இனம்காணப்பட்டனர், அதைவிட வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சிலரிடமும் கொரோனா நோய்தாக்கம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று அறவே ஏற்படாத மாவட்டங்களும் உண்டு, கொரோனா தொற்று ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு அது தொடராமல் பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் இன்றுவரை உள்ள மாவட்டங்களும் உண்டு இவ்வாறான நிலையில் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகள், வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பது தொடர்பான நடவடிக்கைகளை எல்லாமாவட்டங்களுக்கும் ஒரே விதமான சுகாதார நடைமுறைகளை பயன்படுத்தாமல் கொரோனா நோய் தாக்கம் கூடுதலாக ஏற்பட்ட மாவட்டங்களுக்கு இறுக்கமான சுகாதார நடைமுறைகளையும் ஏனைய மாவட்டங்களுக்கு தளர்வான நடைமுறைகளையும் பொதுத்தேர்தல் பிரசாரங்களில் மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கவேண்டும்.

கடந்த கொரோனா நோய் தாக்க காலத்தில் ஊரடங்கு சட்டம் இலங்கையில் எல்லாமாவட்டங்களிலும் ஒரே விதமாக நடைமுறைபடுத்தவில்லை நோய்தாக்கம் உள்ள கொழும்பு கம்பகா மாவட்டங்களில் ஒருவிதமாகவும் ஏனைய மாவட்டங்களில் வேறு விதமாகவும் நேர கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டதை்நாம் அறிவோம்.

அப்படியான ஒரு நடைமுறையை எதிர்வரும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் மேற்கொள்வதற்கான யுக்தியை தேர்தல் ஆணைக்குழு கையாளவேண்டும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள 22, மாவட்டங்களின் சுகாதாரசேவைகள் பணிப்பாளர்களிடம் ஆலோசனைகளை கேட்கும்போது அவர்கள் தமது மாவட்டங்களில் கொரோனா நோய் தொடர்பான தற்போதைய கள ஆய்வு அறிக்கைகளை வழங்குவார்கள் இதன் அடிப்படையில் எந்தந்த மாவட்டங்களுக்கு சுகாதார தளர்வு நிலையை மேற்கொள்ளலாம் எந்தந்த மாவட்டங்களுக்கு இறுக்கமான சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக ஆராய்ந்து தேர்தல் ஆணைக்குழு மாவட்ட ரீதியாக வகைப்படுத்தி தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்நெடடுப்பதால் மக்கள் சிரம் ஏற்படாமலும் சுகாதார நடைமுறைகளை பேணியும் எதிர்வரும் தேர்தலை சரிவர மேற்கொள்ளலாம்.

இல்லையேல் வாக்காளர்குக்கு சரிவர தேர்தல் பிரசாரங்களை முன்கொண்டு செல்லமுடியாதநிலை ஏற்படும் சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் எல்லாமக்களிடமும் இல்லை குறிப்பாக வறுமைநிலையில்உள்ளபாமர மக்கள் எல்லோருமே சமூக வலைத்தளங்களை பாவிப்பதில்லை.

வடக்கு கிழக்குமாகாணங்கள் மலையக பகுதிகளில் இந்த குறைபாடுகள் பல கிராமங்களில் உண்டு துண்டுப்பிரசுரங்கள் வீடுவீடாக சென்று தெளிவூட்டல் கருத்தரங்குகள் கூட்டங்கள் என்பன கட்டாயம் நடத்துவதன் மூலமே பலதரப்பட்டமக்களுக்கும் கட்சி கொள்கைகள் வேட்பாளர் தொடர்பான நல்லெண்ணம் என்பன மக்களை சென்றடையும்,

இதுதொடர்பாக இலங்கையில் உள்ள பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் எனவும் மேலும் கூறினார்.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களான தமிழரசுகட்சி பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.ஶ்ரீநேசன், கோ.கருணாகரம், மா.உதயகுமார்,ந.கமலதாசன், இ.சாணாக்கியன், மு.ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு எட்டுவேட்பாளர்களும் ஒரே மேடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்துநடத்திய தேர்தல் பிரசார முதலாவது கருத்தரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.