டெங்கும் எலிக்காய்ச்சலும் தீவிரமாகப் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை…

இலங்கையின் பல பிரதேசங்களிலும் டெங்குக் காய்ச்சலும் எலிக் காய்ச்சலும் தலைதூக்கியுள்ளன என்று சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவின் மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.

அந்தவகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையான ஐந்து மாத காலப்பகுதியில் 21 ஆயிரத்து 12 பேர் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ள அதேநேரம் 2 ஆயிரத்து 820 பேர் எலிக்காய்ச்சலுக்கும் உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் என்பன தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்கு ஏற்றவகையில் சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்துக்கொள்வதில் மக்கள் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டும் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டின் பல பிரதேசங்களிலும் மழைகாலநிலையைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனினும், இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடியளவானோர் டெங்கு நோய்க்குள்ளானவர்களாகப் பதிவாகியுள்ள அதேவேளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் அதிகளவில் பதிவாகி இருக்கின்றனர்.

அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 43 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 890 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 228  பேரும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 152 பேரும் அதிகூடியளவில்  பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, எலிக்காய்ச்சல் காரணமாக இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத  காலப்பகுதியிலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகூடுதலானவர்கள் பதிவாகியுள்ளனர்.

எனினும், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம்தான் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் எவரும் இக்காய்ச்சலுக்குள்ளானவர்களாகப் பதிவாகவில்லை.

அந்தவகையில் இரத்தினபுரி மாவட்டத்தில் 744 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 343 பேரும், காலி மாவட்டத்தில் 229 பேரும், கேகாலை மாவட்டத்தில் 193 பேரும் என்றபடி எலிக்காய்ச்சலுக்கு அதிகூடியளவில்  உள்ளாகியுள்ளனர். ஆனால், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, அம்பாறை மாவட்டங்களில் மாவட்டத்துக்கு இருபதுக்கும் குறைவானோர்தான் எலிக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகி இருக்கின்றனர்.

இருப்பினும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளவும் குணப்படுத்திக்கொள்ளவும் முடியும்.

சுற்றாடலில் நீர்தேங்க முடியாதபடி சுத்தமாகவும் உலர் நிலையிலும் சுற்றுச்சூழலை வைத்துக்கொள்வதில் அதிக கவனம் வேண்டும். அப்போது இந்நோய்களின் தாக்கங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.