‘மொட்டு’வின் ஆட்சியை இருபது வருடங்களுக்கு அசைக்கவே முடியாது! – மார்தட்டுகின்றார் மஹிந்தர்

“இலங்கையில் தற்போது நடைபெறுவது ராஜபக்சக்களின் ஆட்சி அல்ல; குடும்ப ஆட்சி அல்ல. இது நாட்டு மக்கள் விரும்பிய ஜனநாயக ஆட்சி. ‘தாமரை மொட்டு’வின் ஆட்சி. இந்த ஆட்சியை குறைந்தது இருபது வருடங்களுக்கு எவராலும் அசைக்கவே முடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சி தொடர்பில் எதிரணியினர் வெளியிட்டு வரும் விமர்சனங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் பிளவடைந்து – சிதறுண்டு நிற்கின்ற எதிரணியினர் பொதுத்தேர்தல் பரப்புரைகளுக்காக எமது ஆட்சியை குடும்ப ஆட்சி என்றும், சர்வாதிகார ஆட்சி என்றும், இராணுவ ஆட்சி என்றும் கண்டபடி விமர்சிக்கின்றனர். இவர்களின் விமர்சனங்களுக்கெல்லாம் தேர்தலில் மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள்.

பொதுத்தேர்தலுடன் எதிரணி அரசியல்வாதிகள் பலரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும். அதுவரைக்கும் அவர்கள் எம்மை எப்படியெல்லாம் விமர்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் விமர்சிக்கலாம். அவர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு நாம் தடைபோட மாட்டோம். அவர்களின் விமர்சனங்கள் எல்லாம் எமக்குத் தூசி. ஏனெனில் நாட்டு மக்கள் எமக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

எனது சகோதரர் ஜனாதிபதி. நான் பிரதமர். அதற்காக இந்த ஆட்சியைக் குடும்ப ஆட்சி என்று சொல்ல முடியாது. இது எமது கட்சியும் மக்களும் விரும்பிய ஜனநாயக ஆட்சி. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் எமது நாட்டை முன்னேற்றமடையச் செய்வதே எமது பிரதான இலக்கு. அந்த இலக்கை நாம் அடைந்தே தீருவோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.