‘மொட்டு’ ஆட்சியை கவிழ்த்தே தீருவோம் – சூளுரைக்கின்றார் சஜித்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கவிழ்த்தே தீரும்.”

– இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ.

‘தாமரை மொட்டு’வின் ஆட்சியைக் குறைந்தது இருபது வருடங்களுக்கு எவராலும் அசைக்கவே முடியாது என்று  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமைக்குப் பதில் வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தல் வேறு. பொதுத்தேர்தல் வேறு. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த கருத்து முரண்பாடுகளினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் எம்மால் வெல்ல முடியாமல் போவிட்டது. ஆனால், தற்போது நாம் தனி வழியில் மக்கள் பலத்துடன் நிற்கின்றோம். ‘தொலைபேசி’ சின்னத்தில் பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளோம். எமது வெற்றி உறுதி. ஆட்சியைக் கைப்பற்றியே தீருவோம்.

நாட்டு மக்களைப் பட்டினியால் வாட்டி – மக்களை இராணுவத்தைக்கொண்டு அடக்க முயலும் தற்போதைய அரசை எவரும் விரும்பவேமாட்டார்கள். இந்தநிலையில் இருபது வருடங்களுக்கு ‘தாமரை மொட்டு’வின் ஆட்சி தொடரும் என்று மஹிந்த ராஜபக்ச கனவு காண்கின்றார். அவரின் கனவு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுடன் கலைந்து போகும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.