ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை – இராணுவமயப்படுத்தலில் விளைவு என சந்திரிகா, மங்கள விசனம்

“தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை அமைந்துள்ளது.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

‘இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும்கூட வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூழலை உருவாக்குகின்றது’ என ஐ.நா. விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் , ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ள வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் சந்திரிகா, மங்கள ஆகியோர் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி இடம்பெறுகின்றதெனில் இராணுவ மயப்படுத்தல் தேவையே இல்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தீவிர இராணுவ மயப்படுத்தல் ஏன் என்று ஐ.நா. கேள்வி எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சுதந்திரமாக வாழ வழிவிட வேண்டும். அதைவிடுத்து அவர்களைப் பழிவாங்கும் நோக்கும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவது அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது சட்டமீறல் அல்ல. ஆனால், அதை இராணுவத்தைக்கொண்டு அடக்க முயல்வதுதான் பாரிய சட்ட மீறலாகும். இதை ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.