சொந்தக் கிராமத்தை கவணிக்காத கருணா வேறு கிராமத்தை அபிவிருத்தி செய்வாராம்! அம்பாறை முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன் கிண்டல்

வி.சுகிர்தகுமார்

  பிறந்து வளர்ந்த சொந்தக்கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய முடியாதவர் இன்று வேறு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான  கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

கருணா அம்மான் பிறந்த மண்ணில் வாழுகின்ற மக்களில் அதிகமானவர்கள் மிகவும் வறுமையான கஸ்டப்படுகின்ற அன்றாட தொழிலாளர்கள். அவரது கிராமத்தில் உள்ள அதிகமான வீதிகள் செப்பனிடப்படாத இருள் சூழ்ந்த மணல் வீதிகள். வறுமை நிலையில் உள்ள முன்னிலை மாவட்டம் மட்டக்களப்பு. இவ்வாறு அவரது சொந்தக்கிராமம் சொந்த மாவட்டம் இருக்க இன்று அம்பாரை மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய போவதாக கூறுகின்றார்.

இவர்களை போன்ற பலர் இங்கு களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களது நோக்கம்; அம்பாரை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதல்ல. இங்கிருக்கும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதியை இல்லாமல் செய்து அதன் மூலம் அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் ஆக்குவதுமே என்றார்.

இதேநேரம் அபிவிருத்தியாக இருந்தாலும், நிலம் தொடர்பான பிரச்சினையாக இருந்தாலும் உரிமை சார்ந்த விடயமாக இருந்தாலும் அம்பாரை மாவட்டத்திற்கு தனித்தவமான ஒரு தமிழ் பிரதிநிதி தேவை. அதனை உறுதி செய்ய வேண்டியது இங்கு வாழும் ஒவ்வொரு தமிழனின் கடமை.

ஆயினும் தற்போது அதிகமானவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர். அந்த உரிமை வாக்களித்த மக்களுக்கு இருக்கின்றது. இந்நிலையில் நமது மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டால் எதிர்கால விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் சிந்தித்து செயற்படுமாறு மாவட்ட மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.