இணக்க அரசியலை நான் ஏற்பவன் அல்லன் காலைக்கதிர், தினகரன் செய்திக்கு சாட்டை அடி! அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என தவராசா குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்று நான் தெரிவித்தேன் என்று  காலைக்கதிர், ஐ.பி.சி மற்றும் பிற ஊடகங்களில் விசமத்தனமான செய்திகள்  வெளியிடப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறான கருத்தைத் தெரிவித்தவன் அல்லன். இது என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட செயற்பாடே ஆகும்.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா.

ஊடகங்களில் போலியாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் அவரின் மறுப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்றும் இன்றைய அரசு எதிர்வருத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு – மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு –  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தார் என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைகாலைக்கதிர், தினகரன் இணையம் மற்றும் தமிழ் வின் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

அது தொடர்பில் – அந்தச் செய்தி தொடர்பில் – அவர் தனது மறுப்பைத் தெரிவித்திருக்கின்றார். எந்தத் தனியார் ஊடகத்துக்கும் நான் இவ்வாறாகத் தெரிவித்திருக்கவில்லை. இது வேண்டுமென்று என்மீது சேறுபூசுகின்ற ஒரு நடவடிக்கையாகும்.

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் சில அரசியல் கருத்து மோதல்கள் எனக்கும் கட்சியிலுள்ள சிலருக்கும் ஏற்பட்டுள்ளன. என்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் செயற்பாடு இதுவென்பதை நான் நன்கு அறிவேன். அவர்களது ஊதுகுழல்களாகச் செயற்படும் ஊடகங்கள் ஊடக தர்மத்துக்கு முரணாக – உண்மைக்கு மாறாக –  இவ்வாறான போலியான செய்தியை வெளியிட்டுள்ளன. ஊடகங்கள் அறம் சார்ந்து செயற்படுகின்றனவாயின் இந்த செய்திதொடர்பில் சம்பந்தப்ட்டவரிடம் உறுதிப்படுத்தியே பிரசுரிக்கவேண்டும்.

இணக்க அரசியல் நடத்தவேண்டும் என்று எனது 40 வருடகால சட்டவாழ்க்கையிலும் 10 வருடகால அரசியல் வாழ்க்கையிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் கூறியவன் அல்லன். இணக்க அரசியலை நான் முற்றுமுழுதாக வெறுப்பவன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று நான் குறிப்பிட்டவன் அல்லன். பேச்சு நடத்துவது, எமது தேவைகளைப் பெற்றுக்கொள்வது, அரசியல் தீர்வுக்காகப் பேச்சு நடத்துவது இவை சாதாரணமாக நடைபெறுகின்ற விடயங்கள். ஆனால் இணக்க அரசியலை நான் எப்போதும் சொன்னமை கிடையாது. – என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.