தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், உட்பட ஐந்து அமைப்புகளே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.

தரிஷா பஸ்டியனிற்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள், தரிஷா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கும் விசாரணைகளில் சி.ஐ.டி.யினர் தரிஷா பஸ்டியனை தொடர்ந்து இலக்குவைக்கின்றனர் என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் டிசம்பர் 2019 முதல் சி.ஐ.டி.யினர் தரிஷா பஸ்டியனையும் வேறு பலரையும் சுவிஸ் தூதரக பணியாளரின் போலியான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் தொடர்புபடுத்த முயன்றுள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள், சதி முயற்சி இடம்பெற்றதாக காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனபோல தோன்றுகின்றது என தெரிவித்துள்ளன.

அரசாங்க ஊடகங்கள் தரிசா பஸ்டியனிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக திட்டமிட்ட பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன என்றும் சமூக ஊடகங்களில் அவரை துரோகி மற்றும் குற்றவாளி என முத்திரை குத்தும் பிரசாரங்களும் இடம்பெறுகின்றன என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தரிஷா பஸ்டியன் அரசாங்கத்தின் சண்டே ஒப்சேவரின் ஆசிரியராக பணியாற்றியவர். நியுயோர்க் டைம்சிற்கும் பங்களிப்பு செய்பவர். மனித உரிமைகள், இராணுவ மயமாக்கல், ஊழல், மத சுதந்திரம், ஜனநாயகம் அரசியல் உரிமைகள் போன்ற இலங்கையுடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து எழுதியுள்ளார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள், அவரது எழுத்துகள் தொடர்ச்சியான ஆட்சியாளர்களினால் இலக்குவைக்கப்படும் மக்களின் போராட்டங்களை வெளிக்கொண்டுவந்துள்ளன என தெரிவித்துள்ளன.

குறிப்பாக இன, மத சிறுபான்மையினரின் நெருக்கடிகளை வெளிக்கொண்டுவந்துள்ளன என தெரிவித்துள்ளன.

தரிஷா பஸ்டியனின் பத்திரிகை பணி காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் இலக்கு வைக்கப்படுவது இது முதற்தடவையல்ல என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்புகள், அவர் இலங்கையில் பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலிற்கான போராட்டம் குறித்து எழுதியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.