நாவலடி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியானது ஒரு பகுதி கடலாலும் ஒரு பகுதி உவர்நீர்கொண்ட மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.

குறிப்பாக கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக குடிநீருக்காக பயன்படும் கிணறுகள் உவர் நீராக மாறுவதனால் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த குடிநீர் விநியோகத்திட்டம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதற்கான நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்தது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சுனாமியினால் முற்றாக நிர்மூலமான நாவலடி பகுதிக்கு நீண்டகாலத்திற்கு பின்னர் குடிநீர் விநியோகத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.