கண்டி மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம் – வேலுகுமார்

கண்டி மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், இம்முறையும் அமோக ஆதரவை வழங்கவேண்டும் என    ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை)  நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர், “1947 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி அடிப்படையிலான நாடாளுமன்றத் தேர்தலில் நாவலப்பிட்டிய தொகுதியில் இருந்தும், அளுத்நுவர தொகுதியில் இருந்தும் இரண்டு தமிழர்கள் நாடாளுமன்றம் சென்றிருந்தனர்.

48 ஆம் ஆண்டு குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டதால் 3 தசாப்தங்களுக்கு மேலாக மலையகத் தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர்.

1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்தும் கிடைத்தது.  எனினும், அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அது இழக்கப்பட்டது. இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவாகலாம் என்பது உட்பட சமூகத்தில் விதைக்கப்பட்ட தவறான பிரச்சார யுக்தியாலும், வாக்குகள் சிதறடிக்கப்பட்டதாலுமே இந்நிலைமை ஏற்பட்டது. இதனால் 15 ஆண்டுகளாக கண்டி மாவட்ட தமிழர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவில்லை.

இந்நிலையில்தான் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு ‘வாக்குரிமை’ மூலம் தமிழ் நாடளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுத்தனர். இதற்கு எமது முஸ்லிம் சகோதரர்களும் ஒத்துழைப்பு நல்கினர்.

எதற்காக மக்கள்  தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்தார்களோ அந்த நோக்கங்களுள் பெரும்பாலானவற்றை கடந்த நான்கரை வருடங்களில் நாம் நிறைவெற்றியுள்ளோம். ஒரு பின்வரிசை எம்.பியாக இருந்து மனசாட்சியின் அடிப்படையில் செயற்பட்டுள்ளமை எனக்கு ஆத்ம திருப்தியளிக்கின்றது.

இம்முறையும்  நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மக்கள் தக்கவைத்துக்கொள்வார்கள் என்பது உறுதி கடந்தமுறைபோல் முஸ்லிம் சகோதரர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள்.

ஆனால், வெல்லவே முடியாது என தெரிந்தும், வாக்குகளை உடைப்பதற்காக ஒப்பந்தக்காரர்களாக சில தமிழர்கள் களமிறங்கியுள்ளனர்.  தமிழ் வாக்குகளை உடைத்து, இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே இவர்களின் நோக்கம். எனவே, இப்படியான வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் வாக்குகளானவை வீணானவையாகவே அமையும்.” – என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.