இராணுவ மயப்படுத்தலை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் – துரைராசசிங்கம்

ஜனாதிபதி இந்த நாட்டில் சிங்கள பௌத்த தேசிய வாதத்தை   பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை   துரைராசசிங்கம்   தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஜனநாயகத்தைப் பேணுவதுடன் நிருவாகத்துறைகள் இராணுவ மயமாக்கலை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்  இன்று ( புதன்கிழமை)   நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசு தமது பலத்தை கூடுதலாக பிரயோகிக்கும் என்ற நிலைமை தற்போது உள்ளது.  சர்வதேச கண்காணிப்புக்குழுக்களின் மேற்பார்வையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் அப்போதுதான் ஜனநாயக தேர்தலாக இருக்கும். இந்த விடயத்தில் அரசு இன்னும் சரியான கரிசனை காட்டவில்லை.

அரசு இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பேண வேண்டும். இராணுவ மயப்படுத்தப்படுகின்ற இந்த நிலமையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஜனாதிபதி முற்று முழுதாக சிங்கள பௌத்த தேசியவாதத்தை இந்த நாட்டிலே பரப்புவது இந்த நாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாது என்ற விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் உரிமை வழங்ககூடிய விதத்தில் அரசியல் செயற்பாடுகளை ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சியும் செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை போர் தொடர்பான விடயத்துக்கும் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. பொறுப்புக் கூறுதல் விடயத்தில் ஐக்கிய நாடுகளை சபையில் வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசு சரியான பதிலை வழங்க வில்லை. அதிலிருந்து பின்வாங்குவதாக கூறியுள்ளார்கள்.

சர்வதேச மட்டத்தில் இவ்வாறான ஒரு விடயத்தில் ஒருவரும் பின்வாங்க முடியாது. அதனுடைய செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். பொறுப்புக் கூறலுக்கும் இணக்கம் தெரிவிக்காமல் விட்டால் அது மாற்று வகையில் நிச்சயமாக கையாளப்படும்.

3இலங்கையை ஒரு நாடாக வைத்துக்கொண்டு மக்கள் எல்லோரும் சமமானவர்கள் என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.  தற்போதுள்ள செயற்றிட்டங்களை மறு பரிசீலனை செய்து கொண்டு எல்லோருக்கும் சம உரிமை வழங்க கூடிய விதத்தில் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குகின்ற எங்களது கோரிக்கைக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த அரசாங்க காலத்தில் உருவாக்கி முற்றுப்பெறாதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக்குகின்ற வகையில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு வருகின்ற போது இந்த விடயங்களில் எங்களுடைய பூரண ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம்.

பிராந்தியங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்ட அந்த உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற செயற்பாட்டு அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கக்கூடிய விதத்தில் இருக்குமானால் இந்த நாட்டில் நல்லிணக்கம் வரும் நல்லிணக்கம் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டால் இளம் சமுதாயம் ஆறுதலாக இந்த நாட்டில் வாழக்கூடிய நிலை ஏற்படும் இல்லையெனில் இந்த நாடு பலவித துன்பங்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும். ஏன்பதைக் கருத்தில் கொண்டு அரசு இந்த நாட்டை இலங்கையாக ஆளுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.