மன்னாரில் இருந்து 2,500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றம்!

மன்னாரில் இருந்து 2 ஆயிரத்து 500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களின் பெயர்கள் மன்னாரில் இருந்த புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது மன்னாரில் சுமார் 2 ஆயிரத்து 500 வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “மன்னார் மாவட்டத்தில் இம்முறை 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். தபால்மூல வாக்களிப்பைப் பொறுத்தவகையில் 4 ஆயிரத்து 255 வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 59 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 4 ஆயிரத்து 196 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். தபால்மூல வாக்களிப்பிற்கான விநியோகம் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இம்முறை தேர்தலில், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது சுமார் 2 அயிரம் 500 வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதற்கான காரணம் புத்தளம் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களின் பெயர்கள் இங்கிருந்து புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டமையினால் குறித்த குறைவு ஏற்பட்டுள்ளது. ஏனைய வாக்குச் சீட்டுக்கள் அனைத்தும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மன்னார் மாவட்டத்தில் நீதியானதும், நேர்மையானதும், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியதுமாக நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதன்படி, மன்னார் மாவட்டத்திற்கான மத்திய முறைப்பாட்டு நிலையம் இயங்கி வருகின்றது. குறித்த முறைப்பாட்டு நிலையத்துடன் 023-2223820 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.

குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய முடியும். அதற்குப் பொறுப்பாக மன்னார் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொகான் குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைவிட, நேரடியாக தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திலும் தங்களுடைய முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய முடியும். அல்லது 011-2886179 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் முறைப்பாடு செய்யமுடியும்.

இதேவேளை, தற்போது தேர்தல் பிரசார அலுவலகங்கள் மாவட்ட மட்டத்தில் திறக்கப்பட்டு வருகின்றன. அதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டு வருகின்றது. இம்முறை அனுமதி வழங்கப்படும்போது பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக வழங்கப்படும்.

அதனடிப்படையில், மத்திய தேர்தல் அலுவலகம், கிளை அலுவலகங்களை அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் திறந்துவருகின்றன” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்