எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான சட்சியம்- ரிப்கான் பதியுதீன்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தடுப்புக் காவலிலுள்ள தனது சகோதரரைப் பழிவாங்கவே இவ்வாறு போலிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “எவ்வித சம்பந்தமும் இல்லாமல், எனது பெயரைப் பாவித்துள்ள புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்கள் தொடர்பாக, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும், தனது விளக்கத்தை தெரிவிக்கவும் எனக்கும் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், சாட்சியமளித்த புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், சஹ்ரான் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு, 2018 ஆம் ஆண்டு ரிப்கான் பதியுதீன் ஆகிய நான் மன்னார் துறையில் படகு வழங்கி உதவியதாகச் சாட்சியமளித்தார்.

இவர் வழங்கிய சாட்சியம் தொடர்பாக, இன்று பல ஊடகங்கள் செய்திகளையும் வெளியிட்டுள்ளன. இது குறித்து அதிர்ச்சியடைந்தேன். அரசியல் பழிவாங்கல் காரணமாக இச்சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை முற்றாக நிராகரிக்கின்றேன்.

இதுகுறித்து, எனக்கும் விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்பட வேண்டும். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை திட்டமிட்டு பழிவாங்கவே, எனது பெயரையும் இவ்விடயத்தில் சம்பந்தப்படுத்தியுள்ளனர்.

எனவே, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர் நேற்று வழங்கிய சாட்சிகள் அனைத்தையும் முற்றாக நிராகரிக்கிறேன். இதுபற்றிய அதிருப்தியை ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்க எனக்கும் அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் எழுத்துமூலம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்