இராணுவ ஆட்சி வந்தாலும் ஆச்சரியப்பட முடியாதாம்! என்கிறார் மாவை சேனாதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “கோட்டாபய ராஜபக்ஷவினுடைய இயல்பு மற்றும் இராணுவத்தில் கடமையாற்றிய அனுபவங்களைக் கொண்டு அவர் ஜனநாயக ரீதியாக ஒரு அரச தலைவராக வந்துள்ளார். அவரை மக்கள் ஆதரித்து இருக்கின்றார்கள்.

ஆனால், தமிழர் தாயகப் பிரதேசத்தில் 20 ஆயிரம் உளவாளிகளையும் நடமாட விட்டிருப்பதாக செய்திகள் இருக்கின்றன.

எதிர்காலத்தில், ஜனநாயகத்தின் ஊடாகப் பெற்ற வெற்றி என்று சொல்லி இந்நாட்டிலே ஒரு பூரணமான இராணுவ ஆட்சியொன்றை நிறுவினாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை. அப்படித்தான் நிலைமைகள் இருக்கின்றன.

இந்நிலையில் இன்றைக்கு எதிரணியிலே ஐக்கிய தேசியக் கட்சியும் பலவீனப்பட்டு பிளவுபட்டுள்ள நிலை காணப்படுகின்றது. அதைவிட முஸ்லிங்கள் தரப்பு, மலையகத் தரப்பில்கூட எல்லோரும் பலமாக அல்லது ஒன்றாக இருக்கின்றார்கள் என்ற நிலைமை இன்னும் ஏற்படவில்லை.

அதைவிட, முக்கியமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஒரு பலமான நிலையை நிரூபிக்க வேண்டியதும் ஜனநாயக சக்தியாக பலமடையயும் வேண்டும்.

ஆனால், இதுவரையில் கிழக்கிலிருந்து வடக்குவரைக்கும் பல மாவட்டங்களுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். பல நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறேன்.

சில இடங்களில் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பாக சில சங்கடங்கள் இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெரும் வெற்றிபெற வைப்பதே இப்போதைய தேவை என்பதில் மக்கள் மிக உறுதியாக இருக்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.