மஹிந்தானந்த, கருணாவின்  சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் கடும் சீற்றத்தில் பிரதமர் மஹிந்த!


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றது எனவும், உலகக் கிண்ணத்தை இந்தியா அணிக்கு இலங்கை அணி தாரைவார்த்தது எனவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மகிந்தானந்தவைக் கடுமையாகச் சாடியுள்ள பிரதமர் மஹிந்த, ஒன்பது வருடங்களின் பின்னர் வெளியான இந்தக் கருத்தைத் திருத்திக்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

அன்று மும்பையில் இடம்பெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியை நேரில் பார்வையிடச் சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச, அந்தப் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ள முத்தையா முரளிதரனுக்காக உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்ல வேண்டும் என விருப்பம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆனையிறவு சண்டையில் ஒரே இரவில் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைத் தாம் கொன்றழித்ததாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து தெற்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளையும், அக்கட்சிகளின் வேட்பாளர்களையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்களினால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரசாரம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்