கருணாவுக்கு அடைக்கலம் வழங்கும் மஹிந்தவையும் விசாரிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து

“ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைத் கொன்றதாகத் தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும், இதற்காகத் தன்னை எவராலும் கைது செய்ய முடியாது என்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கருணாவின் இந்தத் திமிர்த்தனத்துக்கு முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவே முழுக்காரணம். எனவே, கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்துவரும் மஹிந்தவையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேரில் விசாரணைசெய்ய வேண்டும்; உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

“குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையுடன் கருணாவை விடமுடியாது. அவரைக் கைதுசெய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்” எனவும் மேலும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ஆனையிறவு சண்டையின்போது 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைத் தாம் ஒரே இரவில் கொன்றதாகத் தெரிவித்ததையடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் எனத் தென்பகுதியில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைப் பொறிக்குள் சிக்கியுள்ளார். இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த காலத்தில் கருணா செய்ததும், தற்போது அவர் தெரிவித்துவரும் கருத்துக்களும் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றங்கள். இப்படிப்பட்டவருக்கு நாட்டின் நீதித்துறை உரிய தண்டனையை வழங்க வேண்டும். இதிலிருந்து அவரைத் தப்பிக்க விடக்கூடாது.

புலிகள் இயக்கத்திலிருந்து விலகி வந்த கருணாவுக்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், பிரதி அமைச்சர் என்ற பதவியையும் வழங்கி அலங்கரித்தவர் மஹிந்த ராஜபக்சவே. அதுமட்டுமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உப தலைவர் என்ற பதவியையும் கருணாவுக்கு வழங்கியிருந்த மஹிந்த, தற்போது கருணாவின் கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியாகவும் இணைத்துள்ளார். இம்முறையும் கருணாவுக்குத் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க மஹிந்த முன்வந்திருந்தமையை கருணாவே தற்போது வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்துவரும் பிரதமர் மஹிந்தவையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.