இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ்

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய மீனவர்கள் விவகாரத்தினை சுமூகமான முறையில் தீர்த்து வைப்பதற்கான திட்ட முன்வரைபு ஒன்றை இந்தியப் பிரதமரிடம் ஒப்படைத்திருந்தார்.

குறித்த திட்ட முன்வரைபில் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியத் தரப்பினர் திருப்தி வெளியிட்ட நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவாரத்தையை முதலில் நடத்துவது என்றும் பின்னர் அமைச்சரவை மட்டத்திலான பேச்சுக்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் கொறோனா வைரஸ் பரவல் காரணமாக திட்டமிட்டபடி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில்இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை கடற் பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைகின்ற இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்றொழிலாளர்களின் வலைகளை அறுத்துச் சேதமாக்குவதன் மூலம் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வதாரத்தினை பாதிக்கச் செய்வதுடன் சட்ட விரோத மீன்பிடி முறைகளை பயன்படுத்தி கடல் வளத்தையும் அழித்துக் கொண்டிருப்பதாக எடுத்துரைத்ததுடன், இந்த விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் ஏற்கனவே திட்டமிட்டது போன்று இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை, காணொளி மூலம் நடத்துவது தற்போதைய சூழலில் நடைமுறைச் சாத்தியமானது என்ற விடயத்தையும் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு கொண்டு வந்திருந்தார்.

அதேவேளை இன்றைய அமைச்சரவையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சரவை இலங்கையின் கடல் வளத்தையும் கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.