தமிழரின் ஒரே தெரிவு தமிழ்க் கூட்டமைப்பே! எம்மை விமர்சித்துத் திரிபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என சம்பந்தன் திட்டவட்டம்

“வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஒரே தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அதை இந்தத் தடவையும் எமது மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் எமது மக்கள் தக்க பாடம் புகட்டியே தீருவார்கள். ஏனெனில் அந்தக் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்காக அரசின் ஆதரவுடன் திட்டமிட்டுக் களமிறக்கப்பட்டவையாகும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

‘இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் களமிறங்கியுள்ள தமிழ்க் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டுமே விமர்சித்து வருகின்றமை’ தொடர்பில் கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருந்து வருகின்றது. இந்தநிலையில், கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைக்க வேண்டும் என்பது தென்னிலங்கையின் திட்டமாக இருக்கின்றது. அதற்காகக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், தமிழரின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களும் அரசின் ஆதரவுடன் தேர்தலில் கட்சிகளினூடாகவும் சுயேச்சைக் குழுக்களினூடாகவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சொந்தமான வாக்குகளைச் சிதறடிப்பதே அவர்களின் நோக்கம். அதற்காகத்தான் அவர்கள் ஊடகவியலாளர் மாநாடுகள் நடத்தியும், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்குபற்றியும், மக்கள் சந்திப்புக்களை நடத்தியும் கூட்டமைப்பினரை விமர்சித்து வருகின்றனர். அவர்களின் விமர்சனங்கள் எமக்குச் சவால்கள் அல்ல. அவை எமக்கான வெற்றிப்படிகள்.

வரித்துக்கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் தமிழ் மக்கள் எம்மை அமோக வெற்றியடையச் செய்வார்கள். அதனூடாக எம்மை விமர்சிக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் எமது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.