கடந்த 5 ஆண்டுகால முன்னேற்றங்களையும் உள்ளடக்கியே கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் – அடுத்த மாதம் முற்பகுதியில் வெளிவரும்: மாவை சேனாதிராஜா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த மாதம் முற்பகுதியில் வெளிவரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பங்காளிக் கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடியே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுகின்றது.
எமது தேர்தல் அறிக்கையில் பல விடயங்களைக் குறிப்பிடவுள்ளோம். 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, மீள்குடியமர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தை வெளியிடவுள்ளோம்.
இன்னமும் என்னென்ன விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடவுள்ளோம். மேலும், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் என்ன என்பதையும் சுட்டிக்காட்டவுள்ளோம்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் எந்த அரசு அமைந்தாலும், அவர்களுடன் கூட்டமைப்பு எவ்வாறான விடயங்களை எந்த அணுமுமுறையின் அடிப்படையில் பேச்சு நடத்தவுள்ளது என்பன உள்ளிட்ட விடயங்களும் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை