’19’ திருத்தத்துக்கு முடிவுகட்டவே மூன்றிலிரண்டு கோருகின்றோம் உண்மையைக் கூறியது மஹிந்த அணி

“பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி நாட்டுக்கு பொருத்தமான  முறையில் அரசமைப்பு திருத்தத்தை உருவாக்கவே புதிய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கோருகின்றோம். நிறைவேற்றுத்துறையைப் பலவீனப்படுத்தவே 19ஆவது திருத்தம் சூட்சமமான முறையில் கொண்டுவரப்பட்டது.”

– இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 19ஆவது  திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தைப் பலவீனப்படுத்தவே உருவாக்கப்பட்டது. முத்துறைக்கும் இடையில் அதிகார ரீதியில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றதால் கடந்த அரசின் அரச  நிர்வாகம் கேள்விக்குறியாக்கப்பட்டன. இதன் தாக்கம் இன்றும் தொடர்கின்றது. 19ஆவது திருத்தம்  அனைத்துத் தரப்பினரின் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

19ஆவது திருத்தத்துடன் தொடர்ந்து அரச  நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. இதன்  காரணமாகவே புதிய நாடாளுமன்றத்தில் இந்தத் திருத்தத்தை நீக்கி  நாட்டுக்கும், அரச  நிர்வாகத்தக்கும் பொருந்தும் விதத்தில் அரசமைப்பில்  திருத்தம் கொண்டுவர புதிய அரசில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைக் கோருகின்றோம்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாஸ அரசியல் ரீதியில் இன்னும் பல விடயங்களைக்  கற்றுக்கொள்ள வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் பல அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு  காணப்படவில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியே பல தசாப்த காலமாக கொழும்பு  மாவட்டத்தில் ஆட்சி புரிகின்றது என்தை  அவர் மறந்துவிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலை வெற்றி கொண்டிருந்தாலும் தேசிய பொருளாதாரத்தை நாம் இன்னும் முன்னேற்றவில்லை. தேசிய வருமானத்தை ஈட்டித் தரும் மார்க்கங்கள் அனைத்தும் தற்போது  தடைப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை, எரிபொருள் விலை ஆகியவற்றை எவ்வாறு குறைப்பது. ஆகவே, எதிர்த்தரப்பினர் நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.