புலிகளின் மறுவடிவம் தமிழ்க் கூட்டமைப்பே! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி

தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுவடிவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்று மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

“புலிகளை அழிக்க உதவிய இந்தியா, புலிகளின் மறுவடிவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவ முன்வரமாட்டார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘கிழக்கு மண்ணில் தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி செயலணியை அமைத்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்டு எமக்கு உதவ வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது’ என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்துத் தொடர்பில் உதய கம்மன்பில பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுவடிவமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது. அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகராக எந்தக் கட்சிகளும் வடக்கு, கிழக்கில் வளரவில்லை.

கூட்டமைப்பினர் ராஜபக்ச அரசை அன்று தொட்டு இன்று வரைக்கும் எதிரியாகப் பார்க்கின்றனர். அத்துடன் அரசின் வேலைத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் நிராகரித்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் வரலாற்றையும் இருப்பையும் மாற்றியமைப்பது ஜனாதிபதி செயலணியின் நோக்கம் அல்ல.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பகுதிகளில் சுதந்திரமாக – மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. அதைவிடுத்து தமிழர்கள் வாழும் நிலங்களை ஆக்கிரமிப்பது அரசின் நோக்கமல்ல” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.