படையினரை காப்பாற்ற கருணாவின் கருத்தை ஆதாரமாக பயன்படுத்துங்கள்: ஜனாதிபதியிடம் பிக்குகள் அமைப்பு கோரிக்கை

சர்வதேசத்தில் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு கருணா வழங்கியுள்ள வாக்குறுதியை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தேசிய பிக்குகள் கூட்டு என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில்  2000 தொடக்கம் 3000 வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக  கருணா அம்மான், அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு தென்னிலங்கையில் வெவ்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, தேசிய பிக்குகள் கூட்டு என்ற அமைப்பின் ஏற்பாட்டாளர் அபயதிஸ்ஸ தேரர், ஜனாதிபதிக்கு தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அபயதிஸ்ஸ தேரர், மேலும் கூறியுள்ளதாவது, “படையினர் யுத்தக் குற்றத்தில்  ஈடுபட்டதாக மனித உரிமை பேரவை தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.

ஆகவே தற்போது கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்தை  சர்வதேசத்துக்கு ஆதாரமாக காட்டி, விடுதலைப் புலிகள்தான் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் அல்ல என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.