ஐக்கிய தேசியக்கட்சியின் குழந்தையே ஐக்கிய மக்கள் சக்தி – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

கறைபடியாத கரங்கள் கொண்ட அரசியல் தலைவரே சஜித் பிரேமதாச. அவருக்கு எதிராக எவரும் விரல்நீட்டி குற்றஞ்சாட்டமுடியாது  என  முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

நுவரெலியாவில்    இன்று  (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கொன்றுவிட்டே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவானது. ஆனால், எமது ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறு அல்ல.அக்கட்சியானது ஐக்கிய தேசியக்கட்சியின் நிர்மாணம். அக்கட்சியின் குழந்தை. இது ஜனநாயக்கட்சி. குடும்ப ஆட்சியுள்ள கட்சி அல்ல. ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு வழங்கிய அனுமதியின் பிரகாரமே எமது பயணம் தொடர்கின்றது.

அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு பலமானதொரு அரசியல் கூட்டணி அவசியம். அதனையே நாம் உருவாக்கினோம். ஜனநாயகம், சமூகநீதி, இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஆகிய மூன்று காரணிகளை முதன்மைப்படுத்தியே ஐக்கிய தேசியக்கட்சி அன்று உருவாக்கப்பட்டது.

1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் எமது கட்சியால் அரச தலைவர் ஒருவரை பெறமுடியாமல்போனது. ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் எதிரணியில் இருந்ததில்லை. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் எம்மால் அரச தலைவர் ஒருவரை பெறமுடியவில்லை. ஏன் இப்படி நடந்தது? இதனால்தான் தலைமைத்துவ மாற்றத்தை மக்கள் கோரினார்கள். சஜித்தான் எங்களுக்கு வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

அதேபோல் நாட்டிலுள்ள புதிய தலைமுறையினருக்கு சம்பிரதாய அரசியல் மீது அதிருப்தி உள்ளது.அதனால்தான் சஜித் போன்ற புதிய தலைவர்களை விரும்புகின்றனர். எனவே, புதிய சந்ததியினர் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாம் வழங்குவோம்.

தமிழ் மக்கள் மத்தியில் கருணாவை வைத்து ஒரு கருத்தையும், தெற்கில் சரத் வீரசேகரவை வைத்து வேறொரு கருத்தையும் முன்வைக்கின்றனர். ஆனால், சஜித் அணி சந்தர்ப்பவாத அரசியல் நடத்தவில்லை. எனவே, இனவாத, சந்தர்ப்பாத அரசியல் நிறுத்தப்படவேண்டும்.”  என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்