தமிழ் அரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் மாவை இருக்கிறார் – சுரேஷ் பிறேமச்சந்திரன்

தமிழ் தேசியக்  கூட்டமைப்பை ஒருபுறம் வைத்து விட்டு தமிழ் அரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் தான் இன்று மாவை சேனாதிராசா இருக்கின்றார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்  இணைப் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிரஜா கூட்டமைப்பில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,  ”மாவை அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் தொடர்பாக தான் கடும் கவலையடைந்திருப்பதாகவும், தேர்தலுக்குப் பின்னர் அவர்களை மீளவும் இணைத்துக் கொள்ள முயற்சி செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

கூட்டமைப்பை ஒருபுறம் வைத்து விட்டு தமிழரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் தான் இன்று மாவை சேனாதிராசா இருக்கின்றார்.

இவர்களது வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாதளவுக்கு கன்னை பிரிந்து நிற்கின்றனர். சுமந்தினும், சிறீதரனும் தமிழர் வாக்குகளை சுருட்டிக் கொள்ள கூட்டு, இவர்களுக்கும் சரவணபவானுக்கும் எந்தப் பேச்சுமில்லை.

கட்சியின் தலைவர் மாவையும், கட்சியின் பேச்சாளர் சுமந்திரனும் ஓடும் புளியம்பழமும் போல ஒட்டிக் கொள்ளாமலே இருக்கின்றனர். தமிழ் அரசுக் கட்சிக்குள் கூட்டுச் சேர்க்க ஆட்களில்லாமல் மாவை அவர்கள் புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தனுடன் கூட்டுச் சேர்ந்து தனது வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்.

அது மாத்திரமல்ல  தமிழ் அரசுக் கட்சிக்குள் தனது தலைமையை தக்க வைத்துக்   கொள்வதிலேயே பாரிய சவால்களை எதிர் கொள்ளும் மாவை அவர்கள் தேர்தல் வருகின்றதென்று தெரிந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்களுக்காக வருத்தப்படுவது என்பது பெரும் நாடகமாகவே தோன்றுகின்றது.

கூட்டமைபிற்கென ஓர் யாப்பை உருவாக்கி அதனைப் பதிவு செய்து ஓர் பொதுச்சின்னத்தைப் பெற்றால்  தமிழ் அரசுக்கட்சி அழிந்து விடும் என நகைப்புக்கிடமான கருத்தைக் கூறி பதிவு செய்வதை மறுதலித்து வருபவர் எவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களை ஒன்றிணைக்க முடியும்?

தமிழ் அரசுக் கட்சியினதும், அவர்கள் இணைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் தமிழ் மக்களை வெறுப்படைய வைத்துள்ளன. இவர்களது கடந்தகால நடவடிக்கைகள் அரசாங்கத்தைப் பாதுகாக்க உதவியதே தவிர, இவர்களால் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியவில்லை.

இதன் காரணமாகத்தான் புதிய சிந்தனையுடனும், புதிய அணுகுமுறையுடனும் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி” என்ற புதிய கூட்டணி உருவாகியுள்ளது. மக்கள் முழுமையகவே ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கின்றனர். அம்மாற்றம் உருவாகியதும் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க அதில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள அனைவரையும் ஒன்றிணைப்போம். அப்போது தமிழரசுக் கட்சியுடனும் பேசுவோம். இப்போதைக்கு, தமிழரசுக் கட்சியை சீர்படுத்த முடியுமா என்பதை மாவை அண்ணை சிந்திக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.