(சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி உதவிகளை வழங்க துறை சார் நிறுவனங்கள் முன்வரவேண்டும்_அரசாங்க அதிபர் அசங்க அபேவர்தன…

சிறிய நடுத்தர தொழில்  முயற்சியாளர்களது பிரச்சினைகளை ஆராயும் விசேட கூட்டம் நேற்று (25) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.
கொவிட் 19 நிலை காரணமாக உலக பொருளாதாரம் சரிவுகளை நோக்கியது.இதனால் இலங்கையின் துறைசார் பொருளாதாரமும் நேரடியாக பாதிக்கப்பட்டது. இதனால்  சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது தொழில் முயற்சிகளை மேற்கொள்வதில் பல தடைகளை எதிர்நோக்கினர்.
எனவே அவர்களது தொழில் முயற்சிகளை முன்னர் இருந்தது போன்று மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுவதாகவும் வங்கிகள் அவர்களது கோரிக்கைகளை கூடிய கவனம் செலுத்தி நிறை வேற்ற முன்வரவரவேண்டும்.திருகோணமலை மாவட்டத்தில் இற்றை வரை பதிவுகளைக்கொண்ட 3054 சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொழில் முயற்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாயதது.அரசாங்கமும் இதனது முக்கியத்துவத்தை உணர்ந்து பல வேலைத்திட்டங்களை பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய வங்கி மூலம் மேற்கொண்டு வருகின்றது.
கொவிட் 19 ற்கு பின்னர் மக்கள் சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு கூடிய ஆர்வம் காட்டுகின்றனர். இது நல்ல ஒரு சந்தர்ப்பமாக  பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஏதுவாக அமைகின்றது. எனவே இவ்விடயத்தில் துறைசார் நிறுவனங்கள் இணைந்து தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான பயிற்சி மற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அரசாங்கம் தொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சிகளை தொடர்ந்தும் ஊக்குவிக்க சலுகை அடிப்படையிலான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.குறிப்பாக கொவிட் 19 நிலையினால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு 4 வீத  வட்டியடிப்படையில் தொழில்படு மூலதனத்தை வழங்கியுள்ளது.அதேபோன்று ஏலவே பெற்ற கடன் வகைகள் பலவற்றிற்கு தவணைக்கட்டணங்களை அறவிடும் காலத்தை நீடித்துள்ளது. இதற்கு மூல காரணம் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களை நிதிப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து குறித்த தொழில் முயற்சிகளை தொடராக மேற்கொள்ளவே ஆகும் என இதன்போது பிரதேச மத்திய வங்கி முகாமையாளர் தெரிவித்தார்.
முனைசார் அடிப்படையில் தொழில் முயற்சிகள் பரவலாக்கப்படல் அவசியமாகும்.புதியவர்களையும் இத்துறையினுள் உருவாக்க வேண்டும். மாவட்ட மற்றும் பிரதேச அடிப்படையிலான துறைசார் அடிப்படையில் தொழில் முயற்சியாளர் அமையங்களை ஏற்படுத்தி  எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதுடன் நீண்டகால குறுங்கால திட்ட முன்மொழிவுகள் தயாரித்து செயற்படல் சாலச்சிறந்தது.புத்தாக்கங்கள் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்கின்றது.அவ்வாறானவர்களை இனங்கண்டு ஊக்குவிப்பது இத்துறையினபிவிருத்திக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அவரை சேர்க்கக்கூடியதாக அமையும் என்று அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உதவி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது அவை உரியவர்களுக்கு இலகுவாக சென்றடையும் வகையில் முறையான அனுகுமுறைகளை  உரிய நிறுவனங்கள் கையாளவேண்டும்.குறிப்பாக வங்கிகள் சலுகை கடன்களை வழங்கும் போது தொழில் முயற்சியாளர்களை கூடிய சிரமங்களுக்கு உட்படுத்தாமல் இலகுவான முறைமைப்படுத்தப்பட்ட முறையில் விரைவாக கடன்களை வழங்க ஆவண செய்ய வேண்டும்.கடன் வழங்க அதிக காலம் எடுக்கும் போது தாம் உரிய தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாக இதன்போது தொழில் முயற்சியாளர்கள் பலர் கருத்துக்களை குறிப்பிட்டனர்.
சிறிய நடுத்தர தொழில் முயற்சிகள் செய்பவர்களுக்கும் புதிதாக இத்துறையினுள் தடம் பதிக்கவுள்ளவர்களுக்கும் ஒத்துழைப்பு மற்றும் உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.கைவிடப்பட்ட தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க கவனம் செலுத்த உரிய துறைசார் திணைக்களங்கள் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அத்துடன் மாவட்ட செயலகத்தில் இது தொடர்பிலான இணைப்பலுவலகம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் உரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. கே.பரமேஸ்வரன்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், சிறு தொழில் முயற்சி வியாபார அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர் பிரளாநவன்,திணைக்கள தலைவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.