கோத்தாவின் ஆட்சியில், முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் அரச புலனாயவாளர்கள். சாள்ஸ் தெரிவிப்பு…

கடந்த அரச தலைவர் தேர்தலுக்குப் பிற்பாடு அரச புலனாய்வாளர்கள் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்வதாகவும், முன்னாள் போராளிகள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதானால் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் செல்லவேண்டுமென கூறுவதாகவும் முன்னாள் போராளிகள் பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறாக கடந்த அரச தலைவர் தேர்தலுக்குப் பிற்பாடு ஒரு இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – குமுழமுனைப் பகுதியில், 25.06 அன்று, இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 2018ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம், 26ஆம் திகதியன்று மைத்திரிபால சிறீசேன மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்கினார். ஆனால் மகிந்த ராஜபக்சவிற்கு பாராளுமன்றத்தில் 113ஆசனங்கள் பெற முடியாமல்போனது.
எனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற குழப்ப நிலைகள், தமிழ் மக்களுடைய அபிப்பிராயம் என்பவற்றிற்கு அமைவாக 33நாட்களுக்குப் பின்னரே ஐக்கியதேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கினோம்.

எங்களுடைய மக்கள் மகிந்த ராஜபக்சவினை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால்தான் உங்களுக்கு தமிழ் மக்கள்வாக்களித்தார்களென, அப்பபோதிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனவிடம் இது தொடர்பில் விளக்கமாக எடுத்துக்கூறியிருந்தோம்.

அவ்வாறான ஒருவருக்கு நீங்கள் பிரதமர் பதவியைக் கொடுத்துள்ளீர்கள் எனவே உங்களுக்கு நாம் ஆதரவளிக்கமுடியாது என்பதையும் விளக்கமாகக்கூறினோம்.

தற்போது கடந்த 2019 நவம்பர் மாதம் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலுக்குப் பிற்பாடு முன்னாள் போராளிகள் பலர் பயந்த நிலையிலேயே தமது வாழ்க்கையை நடாத்துகின்றனர்.

என்னிடம் பல முன்னாள் போராளிகள் தாம் தற்போது எதர்கொள்ளும் பல்வேறு இடர்பாடுகளை என்னிடம் தெரிவிக்கின்றார்கள்.

குறிப்பாக கடந்த அரச தலைவர் தேர்தலுக்குப் பிற்பாடு அரச புலனாய்வாளர்கள் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்வதாகவும், முன்னாள் போராளிகள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதானால் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் செல்லவேண்டுமென கூறுவதாகவும் முன்னாள் போராளிகள் பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறாக கடந்த அரச தலைவர் தேர்தலுக்குப் பிற்பாடு ஒரு இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்