தேர்தலுக்கு 2 வாரங்கள் இருக்கும்போது கருணாவைச் சிறையில் அடைப்பார்கள் – இதுதான் அரசின் தில்லுமுல்லு என்கிறார் ஹரீன் பெர்னாண்டோ

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது கருணா அம்மானைச் சிறையில் அடைப்பார்கள். சிறைச்சாலைகளில் கட்டில், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி என அனைத்தும் உள்ளன. இரண்டு வாரங்கள் உள்ளே வைப்பார்கள். அப்போது அம்பாறையிலுள்ள தமிழ் மக்கள் கருணா எமக்காகச் சிறைக்குச் சென்றார் என நினைப்பார்கள். இதனால், கருணாவைக் காப்பாற்ற நாம் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என எண்ணுவார்கள். இதுதான் அரசின் தேர்தல் தில்லுமுல்லு.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசு இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் தனக்கு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் நடக்கின்றன. 27ஆம் திகதி ஒரு தொலைக்காட்சி கோட்டாபய ராஜபக்சவை நேரடி நிகழ்ச்சிக்கு அழைத்தது. நாடு ஆபத்தில், நாட்டை பொறுப்பேற்க விருப்பமா என்று அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோட்டாபயவிடம் கேட்கின்றார். ஆம் நான் தயாராக இருக்கின்றேன் என்று கோட்டாபய கூறினார். எப்படி விளையாட்டு?, அதன் பின்னர் எப்படி திட்டங்களை தீட்டியுள்ளனர்?. நடந்த அழிவுகள், ஊடகங்கள் நடத்திய விளையாட்டுக்கள் எப்படி?.

நூற்றுக்கு 52 வீதத்தை கோட்டாபய ராஜபக்ச பெற்றார். சஜித் பிரேமதாஸ 42 வீதத்தைப் பெற்றார். கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்த வாக்குகளில் 5 சத வீதம் சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்திருந்தால், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண நேரிட்டிருக்கும்.

ஜே.வி.பியினர் தமது இரண்டாவது விருப்பு வாக்குகளை சஜித் பிரேமதாஸவுக்கே வழங்கியிருந்தனர். இதனை நடக்கவிடாமல் தடுக்கவே ரணில் விக்கிரமசிங்க, தானே பிரதமர் என்ற கதையைக் கூறினார். சஜித் பிரேமதாஸவின் வெற்றியைத் தடுக்கவே ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டது. எனது கொள்கைகளின் அடிப்படையில் நான் பொய் சொல்ல மாட்டேன்.

எனக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையில் பிரச்சினையில்லை. எனினும், ஊடகங்களுடன் பிரச்சினை இருக்கின்றது.

இராணுவத்தைச் சேர்ந்த மூவாயிரம் பேரைக் கொன்றதாக கருணா அம்மான் கூறுகின்றார். அவரைக் குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்துக்கு அழைப்பார்கள் என்று நான் முன்கூட்டியே கூறினேன். அதேபோல் நடந்தது. தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது கருணாவை சிறையில் அடைப்பார்கள்.

சிறைச்சாலைகளில் கட்டில், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி என அனைத்தும் உள்ளன. இரண்டு வாரங்கள் உள்ளே வைப்பார்கள். அப்போது அம்பாறையிலுள்ள தமிழ் மக்கள் கருணா எமக்காகச் சிறைக்குச் சென்றார் என நினைப்பார்கள். இதனால், கருணாவைக் காப்பாற்ற நாம் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என எண்ணுவார்கள். இதுதான் அரசின் தேர்தல் தில்லுமுல்லு.

எவரும் உள்ளே வரக் கூடிய வகையிலேயே நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை உருவாக்கினோம். அரசியலில் இருந்து இன்னும் சிலர் விலகிச் செல்ல உள்ளனர். சரத் பொன்சேகாவுக்கும் அந்த நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. நேர்மையாக அரசியலில் ஈடுபட்டு வருவதே இதற்குக் காரணம்.

ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும். இதனை நான் அச்சமின்றி கூறுகிறேன். அவர்தான் அன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. முப்படை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ், புலனாய்வுப் பிரிவு என அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன.

யானையே சஜித் பிரேமதாஸவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற இடமளிக்கவில்லை. நாங்கள் யானையை நேசிக்கின்றோம். எனினும், தற்போதுள்ள யானை பாகன் பைத்தியக்காரன். யானை பாகனை மாற்ற வேண்டும். சஜித் பிரேமதாஸவிடம் குறைப்பாடுகள் இருக்கின்றன என்று நினைக்க வேண்டாம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்