கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு ஆளுநர் விஜயம் கல்வித்துறையின் எதிர்காலம் குறித்து ஆராய்வு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டதோடு அந்தந்த மாவட்டங்களின் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்ந்தார்.

குறிப்பாக, கல்வித்துறையை முன்னேற்றுவதற்குத் தடையாகவுள்ள விடயங்கள் மற்றும் தேவையான வசதிகள் தொடர்பில் அதீத கரினை செலுத்தியிருந்தார்.

முன்னதாக, நேற்று நண்பகல் கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்த ஆளுநர் சார்ள்ஸ், அம்மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றார்.

இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், மாகாணக்கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், பிரதிக் கல்விப்பணிப்பாளர் (கல்வி நிர்வாகம்) பா.வாசுதேவன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்). அருந்தவச்செல்வம், மாகாணக் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி கல்வி வலய மற்றும் கோட்டப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், “கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பதை அறியும்போது ஆறுதலாக இருக்கின்றது. பொருளாதார ரீதியாகவும் இடப்பெயர்வு ரீதியாகவும் பாதிப்புக்களைச் சந்தித்த இம்மாவட்டத்தைக் கல்வியில் மென்மேலும் உயர்த்த ஆசிரிய சமூகத்தின் மனப்பூர்வமான அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

நமக்கிருக்கும் பல சவால்கள் நாமாகவே சீர்செய்யக்கூடியதாக இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் பின்தங்கிய நாடுகளான சோமாலியா, எதியோப்பியா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் இன்று முன்னேறிக்கொண்டிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது அந்த நாடுகளின் ஒவ்வொரு குடும்பமும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தினார்கள். அவ்வாறு நாமும் ஒவ்வொரு குடும்பத்தையும் முன்னேற்ற வேண்டும். ஆசிரியர்கள்தான் குடும்பங்களோடு நெருங்கிப் பழகிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.

ஆகவே, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லவும் அதனூடாக மாணவர்களைப்  பாடசாலைகளுக்கு உள்வாங்கி அவர்களின் கல்வியை வளர்க்கச் செயற்பட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து வசதிகயையும் செய்துகொடுக்கும் முழு அதிகாரமும் அரச அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அம்மாவட்ட கல்வித்துறை சார் விடயங்கள் ஆராயப்பட்டன.  இந்தக் கலந்துரையாடலில் மாகாண அதிகாரிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் கல்வி வலயங்கள் தொடர்பான நிகழ்த்துக்காட்சி அளிக்கைகளைப் பார்வையிட்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட ஆளுநர் சார்ள்ஸ்,

“கல்வி அபிவிருத்திக்காக எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தற்காலிக உடனடித் தீர்வுகளை வழங்க கல்வி அமைச்சின் செயலாளருக்கும் மாவட்ட அரச அதிபருக்கும் பணித்துள்ளேன். நிரந்தர தீர்வுகளுக்கான ஆவணங்களைத் தயார்செய்து நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிதி பெற்றுத்தர முயற்சிகளைச் செய்கின்றேன்.  கல்வியில் முன்னின்ற மாகாணம் இப்போது பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. ஆகவே, சக்தியும் பலமும் உள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்க ஆசிரிய சமூகம் எம்மோடு கைகோர்க்க வேண்டும்.

சமூகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பிள்ளைகள் ஊடாகப் பெற்றோருக்கு கொண்டுசென்று சமுதாயத்தை உயர்த்த ஆசிரியர்கள் செயற்பட வேண்டும். இயற்கையும் செயற்கையும் மாறி மாறித் தாக்கியிருந்தாலும் பீனிக்ஸ் பறவையைப் போன்று மீண்டெழுந்து நமது சமுதாயத்தை உயர்த்த வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.