மடு மாதா ஆலய திருவிழாவில் ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி- இம்மானுவேல்

அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார்- மடு மாதா திருத்தலத்தில் 2020ஆம் ஆண்டு ஆடி 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆடி மாத திருவிழாவுக்கான இரண்டாவது திட்டமிடல் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை), மடுமாதா திருத்தலத்தின் புனித யோசேவ்வாஸ் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த வருடமும் வழமை போல் இந்த திருவிழாத் திருப்பலி, ஆடி மாதம் இரண்டாம் திகதி (02.07.2020) காலை 6.15 மணிக்கு நடைபெறும்.

மேலும் திருவிழா நாள் அன்று நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு பக்தர்கள் வந்து செல்லலாம். ஆனால் கொவிட்19 காரணமாக ஒரு திருப்பலியில் ஆயிரம் பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும்.

ஆகவே இந்த திருப்பலிகளுக்கு வருகின்றவர்களை நாங்கள் அழைத்து நிற்கின்றோம். ஆயிரம் பேருக்கு மேல் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படமாட்டாது.

திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து காலை 8.30 மணி மற்றும் 10.30 மணி ஆகிய இருநேரங்களில் திருப்பலிகள் நடாத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே குறித்த திருப்பலிகளில் பக்தர்கள் வந்து கலந்து கொள்ள முடியும்.

பெருவிழா நாளில் மருதமடு மாதாவின் ஆலயம் வரும் பக்தர்கள், அரசு தெரிவித்திருக்கும் அறிவுரைகளுக்கு அமைவாக சுகாதாரத்தை கடைப்பிடித்தவர்களாக முக கவசம் அணிந்தவர்களாகவும் கைகளை நன்கு கழுவியவர்களாகவும் சமூக இடைவெளியை பின்பற்றி இவ் விழாவில் கலந்து கொள்ள முடியும்.

திருவிழா நாளான ஆடி இரண்டாம் திகதி அன்று காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

திருப்பலியில் கலந்து கொள்ள முடியாத பக்தர்களின் நலன் கருதி அரச ஊடகமான ரூபாவாஹினி தொலைக்காட்சியில் குறித்த நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் அதன் மூலம் அன்னையின் ஆசீரை பெற்றுக்கொள்ளலாம்” என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.