விக்கி- சம்பந்தன் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்கவேண்டும்: வினோநோகராதலிங்கம்

விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றோர் முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ளவேண்டும். அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு மற்றும் கடமை உங்களிடம் இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா- புளியங்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வினோநோகராதலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப்புலிகளாலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அது என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வரைக்கும் தமிழ் தேசியகூட்டமைப்பை நீங்கள் அழியாமல் பாதுகாத்து வருவதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

நாங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கே வாக்களித்து வந்தோம். ஆனால் அவர் கூட்டமைப்பை விட்டுவிலகிச்சென்று, ஒற்றுமையை குலைத்தாரோ அன்றே அவருக்கான ஆதரவை நிறுத்திவிட்டோமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டமைப்பிற்கான மாற்று அணி நாங்கள்தான் என்று கூறி கடந்த பிரதேசசபைத் தேர்தலில், ஆனந்தசங்கரியுடன் இணைந்துபோட்டியிட்டார்கள். எனினும் இப்பகுதியில் நேரடியாக ஒரு உறுப்பினர் கூட வெற்றி பெறவில்லை.

அவர்களை மக்கள் நிராகரித்திருந்தமை ஒருபுறம் இருந்தாலும் இன்று அந்த கூட்டு  இல்லை. இன்று விக்னேஸ்வரனின் புதிய கூட்டு வந்திருக்கின்றது. அந்தகூட்டும் மாற்றம் தேவை என்று கூறுகின்றது.

எல்லோரும் ஐயாக்கள்தான். வயது முதிர்ந்தவர்கள். வீட்டிலே இருந்து ஓய்வு எடுக்க வேண்டியவர்கள். புதிதாக வந்து அரசியல் செய்கின்றார்கள். அவர்களை வீட்டுக்கு நிர்பந்தமாக அனுப்பவேண்டியது உங்களது கடமை.

மேலும் சம்பந்தன் அரசியல் அரங்கில் இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ளவேண்டும். அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு மற்றும் கடமை உங்களிடம் இருக்கின்றது.

அத்துடன் சம்பந்தனின் அனுபவத்தை நாங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும். பயன்படுத்த வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை.

அதுபோல கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குகின்றவர்கள் துடிப்புள்ள அறிவுள்ள வல்லமையும் ஆற்றலும் கொண்டிருக்கவேண்டும் என்பது உங்களது கருத்தாக இருக்கின்றது.

ஆகவே சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கூட்டமைப்பிற்கு தலைமைதாங்குகின்ற பொறுப்பை, நாங்கள் விடுவிக்க வேண்டும். அவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். நாங்கள் பலமாக இருக்கும்போது அதனை செய்வோம்.

அத்துடன் கூட்டமைப்பில் இருந்துகொண்டு விடுதலைப்புலிகளையோ அல்லது விடுதலை போராட்டத்தையோ கொச்சைப்படுத்துபவர்களை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றுவதற்கும் நாம் தயங்கமாட்டோம்” என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.