தமிழ் தேசியம் பேசுபவர்களின் ஆதாரங்கள் எனது கையில்- கருணா விடுத்துள்ள மிரட்டல்!

தமிழ் தேசியம் பேசுபவர்கள் தொடர்பாக தம்மிடம் இருக்கும் ஆதாரங்கள் கையளிக்கப்பட்டால் அவர்களை நேரடியாக கைது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “யுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது. இதுபோன்ற நிலைமைகளை மாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் பேச்சு அமைந்திருந்தது.

அரசியல் மேடைகளில் பிரசாரங்களுக்காக எதையும் பேசலாம் என்ற சுதந்திரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை நாங்கள் ஒரு அரசியல் பேச்சாகத்தான் தெளிவாக்கினோம்.

தற்போது அரசியலுக்காக திரிவடைந்துள்ள ஒரு பிரசாரமாகத்தான் எனக்கெதிராக அண்மைக்காலமாக பலர் தெரிவிக்கின்ற கூவல்களைப் பார்க்கின்றேன்.

இந்த விடயத்தைப் பொறுத்தளவில் தமிழர் தரப்பில் இதனைப் பெரிதாக எடுத்துக் கூறியிருந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது காப்பாற்ற முற்படாமல் காட்டிக்கொடுக்கும் கும்பலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாற்றமடைந்துள்ளது. இதில் குறிப்பாக கோடீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள்தான் கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

இத்தனைக்கும் தமிழர்களுக்கான தீர்வு தனித் தமிழீழம்தான் என விடுதலைப் புலிகளின் மேடையில் நின்று பேசிய பேச்சுக்கள் என்னிடம் இருக்கின்றன. மனோ கணேசன் வவுனியாவில் வைத்துப் பேசிய பேச்சு, சம்பந்தன் ஐயா விடுதலைப் புலிகளின் பொங்கு தமிழ் முதல் மேடையில் பேசிய பேச்சு ஆகியவை என்னிடம் உள்ளன. இவற்றையெல்லாம் நான் கொடுத்தால் இன்று அவர்களை நேரடியாகக் கைது செய்வார்கள்.

போராட்டக் காலத்தில் எங்களைக் காட்டிக் கொடுத்த கும்பல்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது. அவர்களின் இரத்தம் இன்னும் மாறவில்லை. இன்று எனக்கு ஒரு பிரச்சினை வரும்போது அவர்களின் காட்டிக்கொடுக்கும் எண்ணம் வெளிப்பட்டு வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.