மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை – கருணா

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

அம்பாறையில் அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “என்னை விமர்சித்தவர்கள் உதாரணமாக மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தன் ஐயா போன்றோர் அனைவருமே விடுதலைப்புலிகளின் பொங்குதமிழ் நிகழ்ச்சியில் சென்று வழங்கப்பட்ட அடையாள சின்னத்தை நெஞ்சில் பொருத்திக்கொண்டு தனி நாடுதான் ஒரே தீர்வு விடுதலைப் புலிகளை நாங்கள் ஆதரிக்கின்றோம் என கூறியவர்கள்.

அவர்கள் பேசியது என்னிடம் உள்ளது. இதனை நான் உடனடியாக வெளியிட்டால் அவர்களை கைது செய்ய வேண்டி வரும் இதனை அறிந்துகொண்டுதான் அவர்கள் இனிவரும் காலங்களில் பேச வேண்டும்.

மேலும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினையில் தலையிடத் தேவையில்லை. வடக்கு கிழக்கு பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம். நீங்கள் இங்கு வர வேண்டிய அவசியமில்லை. கல்முனை மக்கள் அடித்து துரத்தியதை மறந்து விட்டார் போல இனிமேல் வந்தால் மக்கள் துரத்தி அடிப்பார்கள்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்