முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் இம்முறையும் பலப்படுத்த வேண்டும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு 9 உறுப்பினர்கள் தெரிவாகும்வகையில் வாக்களித்து, முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் இம்முறையும் பலப்படுத்த வேண்டும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொத்மலையில் 27.06.2020 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

இலங்கையில்  அதிக  தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. சுமார் 14, 15 உறுப்பினர்கள் தெரிவாவார்கள். கூட்டமைப்புக்கு அடுத்தப்படியாக அதிக தமிழ் உறுப்பினர்களைக்கொண்ட கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணியாகும்.

இம்முறை எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இவ்வாறு எட்டுபேர் தெரிவானால் ஒரு தேசியப்பட்டியலும் கிடைக்கும். அப்போது முற்போக்கு கூட்டணியின் சார்பில் 9 பேர் பாராளுமன்றம் சென்றுவிடலாம்.பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தும் கிடைக்கும். எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் பலப்படுத்தவேண்டும்.

சஜித் பிரேமதாசவை எதற்காக ஆதரிக்கின்றோம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில விடயங்களை குறிப்பிடுகின்றேன். மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே வாக்குரிமை வழங்கினார். ஜனவசிய திட்டத்தை அமுல்படுத்தினார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை, கம்முதாவ திட்டம் என மக்களுக்காக பல சேவைகளை செய்துள்ளார். இதன்காரணமாகவே அவரின் மகனான சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். அவரும் சிறப்பாக செயற்படக்கூடியவர்.

ரணசிங்க பிரேமதாசதான் ஆயுதம் வழங்கினார் என கருணா இன்று கூறுகிறார். அதனைவிடவும் அவர் மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார் என்பதை கூறிக்கொள்கின்றேன். நுவரெலியா மாவட்ட மக்கள் தொலைபேசி சின்னத்துக்கும் எமது கூட்டணியில் போட்டியிடும் மூவருக்குமே வாக்களிக்கவேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.